கற்க கசடற! பொதுத்தேர்வுக்கு தயாராக 83,335 மாணவ, மாணவியர்
கற்க கசடற! பொதுத்தேர்வுக்கு தயாராக 83,335 மாணவ, மாணவியர்
UPDATED : பிப் 18, 2025 12:00 AM
ADDED : பிப் 18, 2025 09:55 AM

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை, 83 ஆயிரத்து, 335 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.
மார்ச், 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கி, மார்ச், 25ம் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில், 11 ஆயிரத்து, 874 மாணவர்கள்; 13 ஆயிரத்து, 989 மாணவியர் என மொத்தம், 25 ஆயிரத்து, 863 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச், 5ல் துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. 12 ஆயிரத்து, 485 மாணவர்கள், 14 ஆயிரத்து, 752 மாணவியர் என மொத்தம், 27 ஆயிரத்து, 237 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 15 ஆயிரத்து, 87 மாணவர்கள்; 15 ஆயிரத்து, 148 மாணவியர் என, 30 ஆயிரத்து, 235 பேர் எழுதுகின்றனர். மார்ச், 28ல் துவங்கி, ஏப்ரல், 15ம் தேதி வரை நடக்கிறது.
மாவட்டத்தில் பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வை மொத்தம், 39 ஆயிரத்து, 446 மாணவர்கள், 43 ஆயிரத்து, 889 மாணவியர் என, 83 ஆயிரத்து, 335 பேர் எழுத உள்ளனர். முன்னதாக கடந்த, 7ம் தேதி பிளஸ் 2 செய்முறைத் தேர்வு துவங்கியது. நாளை மறுதினம் (19ம் தேதி) இத்தேர்வுகள் முடிகிறது.
முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் கூறியதாவது:
மாவட்டம் முழுதும், 93 மையங்களில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வும், 107 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்களை தருவிக்க நான்கு இடங்களில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்வு பணிகளுக்கு, 92 முதன்மை கண்காணிப்பாளர், 1,570 அறை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கு இன்னமும் இரு வாரங்கள் மட்டுமே உள்ளதால், தேர்வெழுத இருக்கும் நாட்களை உபயோகமாக பயன்படுத்தி மாணவ, மாணவியர் தயாராக வேண்டும்.