ஸ்ரீவி., தனியார் பயிற்சி மையத்தில் நீதிபதி, அரசு அதிகாரிகள் சோதனை
ஸ்ரீவி., தனியார் பயிற்சி மையத்தில் நீதிபதி, அரசு அதிகாரிகள் சோதனை
UPDATED : ஏப் 12, 2024 12:00 AM
ADDED : ஏப் 12, 2024 10:52 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியில் தனியார் பயிற்சி மையத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி இருதய ராணி, மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே ராஜா வோக்கஷனல் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பெண்களுக்கு நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இங்கு நேற்று காலை 11:30 மணிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி இருதய ராணி, மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா, குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பயிற்சி மையத்தின் பல்வேறு அறைகளில் அதிகாரிகள் மாலை 5:00 மணி வரை சோதனை செய்து, ஒரு அறைக்கு சீல் வைத்தனர். மேலும் அங்குள்ள கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எந்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் பதிலளிக்க மறுத்து விட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பயிற்சி மையத்தை மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர்.