சோலார் பேனல் டெக்னீஷியன் பயிற்சி தாட்கோவில் விண்ணப்பிக்க அழைப்பு
சோலார் பேனல் டெக்னீஷியன் பயிற்சி தாட்கோவில் விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : பிப் 26, 2026 02:57 PM
ADDED : பிப் 26, 2026 02:59 PM
நாமக்கல்:
'தாட்கோ மூலம் சோலார் பேனல்கள் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சிக்கு, ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து, சோலார் பேனல்கள் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், 18 முதல், 32 வயது வரை நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலம், 45 நாட்கள். இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு, தேசிய திறன் மேம்பாட்டுக்கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன், ஆரம்பகால மாத சம்பளமாக, 18,000 முதல், 30,000 ரூபாய் வரை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
வேலைவாய்ப்பை விரும்பாத இளைஞர்கள், சுயமாக தொழில் தொடங்குவதற்கு, தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். இப்பயிற்சி பெற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம், டாக்டர் ரெட்டி நிறுவனம் மூலமாக வழங்கப்படும். விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

