தமிழுக்கு அமுதென்று பேர்! அந்த தமிழ் பாடம் சொல்லித்தர அதிக பாடவேளை கேட்டு போர்
தமிழுக்கு அமுதென்று பேர்! அந்த தமிழ் பாடம் சொல்லித்தர அதிக பாடவேளை கேட்டு போர்
UPDATED : பிப் 19, 2025 12:00 AM
ADDED : பிப் 19, 2025 09:19 AM

கோவை:
பாரதியார் பல்கலையின் கீழ், தமிழ் பாடங்களுக்கான பாடவேளை நேரம் குறைப்பட்டுள்ளதாக, தமிழாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பல்கலைகளில், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற சில துறைகளுக்கு இளநிலை முதலாமாண்டு மட்டுமே தமிழ் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பிற துறைகளுக்கு முதல், இரண்டு ஆண்டுகள் தமிழ் பாடம் அதாவது, நான்கு தாள்கள் மாணவர்கள் எழுதினர்.
இதிலுள்ள முரண்பாடுகளை களைய, 2021ல் இளநிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தமிழ் பாடம் கட்டாயம் படிக்கவேண்டும் என அரசு அறிவித்தது. பாரதியார் பல்கலையில் இந்த அறிவிப்பு, 2023 - 24ம் ஆண்டு முதல் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
பாரதியார் பல்கலையில், 2022 - 23ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தும் போது, பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது.
பிற பாடங்களுக்கு, 6 மணி நேரமாக பாடவேளை ஒதுக்கப்பட்டது. ஒரே பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க, துறைகளுக்கு வெவ்வேறு பாடவேளை நேரம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், அனைத்து துறைகளுக்கும் தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக, தமிழ் ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பிற பாடங்களை போன்று, தமிழ் பாடத்துக்கும் வாரத்துக்கு ஆறு பாடவேளை ஒதுக்க, தமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், தற்போதையை சூழலில் தமிழ் மொழி குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. அதனால், அவர்களுக்கு தமிழை புரிய வைக்க, 6 மணி நேரம் அவசியம் தேவை.
நான்கு பருவத்திலும் தமிழ் இருக்க வேண்டும் என, அரசு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது. இளநிலை பிரிவில், அனைத்து துறை மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம் பாடம் பொதுவான பாடத்திட்டம் கொண்டது.
ஒரு பிரிவினருக்கு வாரத்துக்கு, 4 பாடவேளை என்பதும், ஒரு பிரிவினருக்கு, 6 பாடவேளை என்பதும், குறிப்பிட்ட பாடத்துக்கு, 5 மணி நேரம் என்பது ஏற்புடையதல்ல. வேளை நேரத்தை சரிசெய்கின்றோம் என்ற பெயரில், தமிழ் பாடவேளைகளை குறைப்பது கண்டிக்கத்தக்கது.
அனைத்து பாடங்களுக்கும் வழங்கப்படும் முக்கியத்துவத்தை, தமிழ் பாடத்திற்கும் வழங்கி பாடவேளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றார். தமிழை கொண்டாடி, தமிழில் கவிதைகள் புனைந்த அந்த பாரதியின் பெயரால் அமைந்துள்ள பல்கலையிலேயே, தமிழ் கற்க போராட வேண்டியுள்ளது!
பாரபட்சம் இல்லை
பல்கலை நிர்வாக பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், இது முற்றிலும் தவறான புரிதல். தமிழ் பாடம் இரண்டாம் ஆண்டுக்கும் கட்டாயம் எனக் கூறியதால், திடீரென கூடுதலாக பாடவேளையை சேர்க்க வேண்டி இருந்தது. கூடுதலாக சேர்க்கும் போது, சில பாடவேளைகளை குறைக்கவேண்டி இருந்தது.ஆகையால், அந்தந்த துறைகளுக்கான பாடங்களின் தன்மைக்கு ஏற்ப, 4, 6 மணி நேரம் பாடவேளை தமிழுக்கு பின்பற்றப்பட்டது. தற்போது, அனைவருக்கும் ஒரே சமநிலையில், தமிழ் பாடவேளை பின்பற்றவேண்டும் என, பாடத்திட்ட குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடத்திட்ட குழு, தமிழ் துறையுடன் ஆலோசித்து, வல்லுநர்கள் கலந்துரையாடியே முடிவெடுப்பார்கள். பாரபட்சம் ஏதுவும் இல்லை என்றார்.

