UPDATED : மே 14, 2025 12:00 AM
ADDED : மே 14, 2025 08:40 AM
சென்னை:
தமிழக அரசின் சிறந்த நுால்கள் பரிசுக்கு, கடந்தாண்டில் வெளியான நுால்களை அனுப்பலாம் என, தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, துறையின் இயக்குநர் அருள் வெளியிட்டு உள்ள அறிவிப்பு:
கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், திறனாய்வு, நுண்கலைகள், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட 33 வகைப்பாடுகளில், கடந்தாண்டு வெளியான சிறந்த நுால்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த நுாலாக தேர்வாகும் ஒவ்வொன்றுக்கும் தலா, 50,000 ரூபாயும், அதை பதிப்பித்த பதிப்பகங்களுக்கு தலா, 25,000 ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
இதற்கு, நுாலின் ஐந்து பிரதிகளை, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008 என்ற முகவரிக்கு நேரிலோ, தபாலிலோ அனுப்பலாம். மேலும் விபரங்களை, www.tamilvalarchithurai.org/siranthanool என்ற இணையதள முகவரியில் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.