UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 07:09 PM

சென்னை:
புதிய கல்வி கொள்கையில் இருந்து முரண்படும் தமிழகத்துக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நாட்டில் தமிழ் உள்ளிட்ட தாய்மொழி கல்வி, தாய்மொழியில் தேர்வு, எதிர்கால மாணவர்களுக்கு ஒழுங்கான கல்வித்திட்டம் உருவாக்குவதை எல்லாம், உங்கள் அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கிறீர்களா என, கேட்டிருந்தார்.
இதற்கு, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் அளித்துள்ள பதில்:
தமிழகம் 1930களில் துவங்கி, 1960கள் வரை பல போராட்டங்கள் வாயிலாக தமிழின் உரிமையை பாதுகாத்துள்ளது. அதேசமயம், இளைஞர்கள், ஆங்கிலப் புலமை பெற்றிருப்பதையும் விரும்புகிறது. அதனால், இதுவரை இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. அதன்படியே, தமிழகத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
மத்திய அரசு தேர்வுகளையும், தமிழில் நடத்த தமிழகம் வலியுறுத்துகிறது. இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளுக்கான பாடங்களையும் தமிழில் மொழி பெயர்த்து, நாட்டில் முன்னிலையில் உள்ளது.
புதிய கல்விக் கொள்கையில், எங்களின் கொள்கைக்கு வலுசேர்க்கும் திட் டங்களை, தமிழகம் ஏற்கனவே செயல்படுத்துகிறது. ஆனாலும், மும்மொழி கொள்கை, சில பாடத்திட்டங்களில் மாற்றம் உள்ளிட்டவற்றை மட்டுமே எதிர்க்கிறது. இதற்காக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள, சமக்ர சிக் ஷா நிதியை, இதனுடன் இணைத்து நிறுத்தி வைக்காமல், அரசியலைப்பு சட்டத்துக்கு இணங்கி விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.