ஆயுள் காப்பீட்டில் முன்னிலையில் தமிழ்நாடு: ஐஏசி-லைப் ஆய்வு
ஆயுள் காப்பீட்டில் முன்னிலையில் தமிழ்நாடு: ஐஏசி-லைப் ஆய்வு
UPDATED : ஆக 22, 2025 12:00 AM
ADDED : ஆக 22, 2025 04:41 PM
சென்னை:
சந்தை ஆராய்ச்சி நிறுவனம் கந்தர் உடன் இணைந்து இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டி நடத்திய சமீபத்திய ஆய்வில், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் அதிக ஊடுருவல் வாய்ப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, தமிழ்நாட்டில் 100 சதவீத விழிப்புணர்வு காணப்படுவதோடு, இதுவரை பாலிசி எடுக்காதவர்களில் 70 சதவீதம் பேர் அடுத்த 3-6 மாதங்களில் ஆயுள் காப்பீடு எடுக்கத் தயாராக உள்ளனர். இது தேசிய அளவிலான சராசரி 55% ஐ விட அதிகமாகும். மேலும் உத்தரபிரதேசம் (58%), மேற்குவங்கம் (53%), ஆந்திரா & தெலுங்கானா (26%) போன்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது.
பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் எதிர்பாராத வாழ்க்கைச் சவால்களை சமாளிக்கவும், குடும்ப நிதி பாதுகாப்பை உறுதிசெய்யவும் காப்பீடு அவசியம் என்று கருதியுள்ளனர். இதனால் “சப்சே பெஹ்லே லைப் இன்ஷூரன்ஸ்” பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என ஐஏசி-லைப் இணைத் தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆய்வில் சேமிப்புடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்கள் குறித்து 63% பேர் அறிவு பெற்றிருப்பதாகவும், தற்போது 34% பேரே அந்த வகை பாலிசிகளை வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால், மக்களிடையே சரியான விளக்கங்கள் மற்றும் எளிய தயாரிப்புகள் வழங்கப்பட்டால், தமிழ்நாட்டில் ஆயுள் காப்பீட்டு சந்தை வேகமாக வளரக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.