அடிப்படை கல்வி அறிவு தேர்வில் தமிழகம் 100 சதவீத தேர்ச்சி
அடிப்படை கல்வி அறிவு தேர்வில் தமிழகம் 100 சதவீத தேர்ச்சி
UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM
ADDED : ஜூன் 04, 2025 04:44 PM

 புதுடில்லி: 
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட, அடிப்படை கல்விக்கான எழுத்து மற்றும் எண் அறிவு மதிப்பீட்டுத் தேர்வில் தமிழகம், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, உல்லாஸ் -நவ பாரத் எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு மதிப்பீட்டுத் தேர்வை நடத்தி வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. படித்தல், எழுதுதல், எண்ணறிவு ஆகிய மூன்று பாடங்களில், தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக இது நடத்தப்படுகிறது.
கடந்த, 2024 ஜூலை - 2025, மார்ச் இடையே நடத்தப்பட்ட தேர்வில், நாடு முழுதும் இருந்து, 1.77 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 2025, மே நிலவரப்படி, 34 லட்சத்து, 31,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதத்தை தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனம் மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழகம், 100 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய, 5 லட்சத்து, 9,694 பேரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக டில்லி 99.3 சதவீதமும், திரிபுரா 98.1 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

