தேசிய அளவில் தமிழக மாணவர்கள் மீண்டும் பின்தங்கும் நிலை; கல்வியாளர்கள் கருத்து
தேசிய அளவில் தமிழக மாணவர்கள் மீண்டும் பின்தங்கும் நிலை; கல்வியாளர்கள் கருத்து
UPDATED : ஆக 11, 2025 12:00 AM
ADDED : ஆக 11, 2025 11:12 AM
கோவை:
தமிழக அரசு மாநிலக் கல்விக் கொள்கை 2025ல், 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி, இருமொழிக் கொள்கை, பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து, கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகள்:
போட்டித் தேர்வுகளில் பின்னடைவர் கல்வியாளர் சோமசுந்தரம்: 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது நல்லதல்ல.
ஜே.இ.இ., நீட்., ஐ.சி.ஏ.ஆர்., கிளாட் போன்ற, 70க்கு மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளில், பிளஸ் 1 பாடப்பிரிவுகள், 50 சதவீதம் மற்றும் பிளஸ் 2 பாடப்பிரிவுகள், 50 சதவீதம் என்ற அடிப்படையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. பிளஸ் 1 தேர்வை ரத்து செய்தால், 90 சதவீத தனியார் பள்ளிகள் பிளஸ் 2 பாடங்களை தொடக்கம் முதல் கற்பிக்க தொடங்கிவிடுவர்.
இதை கட்டுப்படுத்த, மாநிலக் கல்விக் கொள்கையில் எந்த விதமான கண்காணிப்பு விவரமும் குறிப்பிடப்படவில்லை. இதனால், போட்டித்தேர்வுகளில் தமிழ்நாடு மீண்டும் பின்தங்கும். என்.ஐ.டி., ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., கல்லூரிகளில் சேரும், தமிழக மாணவர்களின் விகிதம் குறையக்கூடும்.
ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் மேல்நிலை மதிப்பீட்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்
கல்வியாளர் நெடுஞ்செழியன்: பிளஸ் 1 தேர்வை ரத்து செய்தால், பொறியியல் மற்றும் பிற உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, அடிப்படை கற்றல் குறையும் வாய்ப்பு உருவாகும். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு தயாராக முடியாமல், பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு
கல்வியாளர் பாலகிருஷ்ணன்: பிளஸ் 1 தேர்வு ரத்து செய்வது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படை அறிவு வளர்ச்சியை பாதிக்கும்.போட் டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றி பெறும் எண்ணிக்கையை அதிகரிக்கவே, பிளஸ் 1 பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது.
அதை ரத்து செய்வது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும். தனியார் பள்ளிகளில் நேரடியாக, பிளஸ் 2 பாடங்களை கற்பிக்க ஆரம்பித்து விடுவார்கள்.