தமிழக மாணவர்கள் வெற்றி; யு.பி.எஸ்.சி.,யில் அதிகரிப்பு
தமிழக மாணவர்கள் வெற்றி; யு.பி.எஸ்.சி.,யில் அதிகரிப்பு
UPDATED : செப் 25, 2024 12:00 AM
ADDED : செப் 25, 2024 06:28 PM

சென்னை:
நான் முதல்வன் திட்டம் துவக்கப்பட்ட பின், தமிழகத்திலிருந்து யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் உதயநிதி கூறினார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நினைவு நுாலகத்தில், தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், குடிமைப்பணி தேர்வுகளுக்கான படிப்பகம் திறப்பு; முன்னாள் படைவீரர்களுக்கு திறன் பயிற்சி வகுப்பு துவக்கம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.
திட்டங்களை துவக்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 30 லட்சம் பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பயன் அடைந்துள்ளனர். யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வோர் ஆண்டும், 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்கு தயாராக, மாதம் 7,500 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 25,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற, 453 பேருக்கு தலா 25,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டம் துவக்கப்படும் முன், தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு 36 பேர் மட்டுமே யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு, 47 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதுதான், நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி.
இவ்வாறு கூறினார்.