பள்ளி கல்வித் துறை வளாகத்தில் தமிழ் ஆசிரியர்கள் தர்ணா
பள்ளி கல்வித் துறை வளாகத்தில் தமிழ் ஆசிரியர்கள் தர்ணா
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 09:55 AM
புதுச்சேரி:
புதுச்சேரி, காரைக்காலில் பணி புரியும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கும் என பள்ளி கல்வித் துறை அறிவித்தது. இதற்காக 245 தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் நகர்புறங்களில் உள்ள பணிகளை பணியாற்ற தேர்வு செய்தனர்.
இரண்டாம் நாளாக நேற்று நகர்புறங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்கு செல்லுவதற்கான இடமாறுதல் நேர்காணல் நேற்று துவங்கியது. இதற்கு தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டு, தமிழ் ஆசிரியர்கள் கலந்தாய்வினை புறக்கணித்தனர்.
இது குறித்து தமிழ் ஆசிரியர்கள் கூறும்போது, 55 வயது பூர்த்தியடைந்த ஆசிரியர்கள் காரைக்கால் பிராந்தியத்திற்கு செல்ல தேவையில்லை. இதேபோல் ஆசிரியர்கள் 57 வயது பூர்த்தியடையும்போது, கிராமப்புறங்களுக்கு செல்ல தேவையில்லை என்று அரசாணை உள்ளது.
தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் கடைசியாக 2021ல் செப்டம்பர் மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் அடுத்த மாதத்துடன் பணியிட மாறுதல் காலம் நிறைவடைகிறது.
ஆனால் அடுத்த மாதம் வரை ஆசிரியர்களின் வயதினை கருத்தில் கொள்ளலாம், 31.12.2023 தேதி வயதை கணக்கிட்டு இடமாறுதல் செய்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் ஓய்வு தருவாயில் உள்ள தமிழ் பட்ட தாரிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கலந்தாய்வினை ரத்து செய்து, புதிய பணியிட மாறுதல் கொள்கைபடி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றனர்.ஆசிரியர்கள் போராட்டம் 1 மணி வரை நீடித்த போதிலும் பேச்சு வார்த்தையும், இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இதனையடுத்து அங்கிருந்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.