ஆய்வின்றி அங்கீகாரம் வழங்கிய தஞ்சை பேராசிரியர் சஸ்பெண்ட்
ஆய்வின்றி அங்கீகாரம் வழங்கிய தஞ்சை பேராசிரியர் சஸ்பெண்ட்
UPDATED : ஏப் 08, 2024 12:00 AM
ADDED : ஏப் 08, 2024 09:19 AM
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, அரசு கல்வியியல் கல்லுாரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றியவர் ராஜசவுந்தர்ராஜன், 59. இவர், 2020ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கர்னுால் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லுாரி துவங்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஆய்வு செய்ய, தேசிய கல்வியியல் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினராக சென்றிருந்தார்.
ஆனால், முறையாக கட்டமைப்புகளை ஆய்வு செய்யாமல், அனுமதி சான்றிதழை அவர் வழங்கியதாக, எழுந்த புகாரில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், சி.பி.ஐ.,க்கு புகார் அளித்தனர்.
விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள் ராஜசவுந்தர்ராஜன் லஞ்சம் பெற்று, போலி சான்றிதழ்களை வழங்கியதாக உறுதிப்படுத்தியது. தொடர்ந்து, ராஜசவுந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி, தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் கார்மேகம், போலியான சான்றிதழ் வழங்கிய ராஜசவுந்தர்ராஜனை, சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளதாக, தஞ்சாவூர் கல்லுாரி கல்வி இணை இயக்குனர் தனராஜன் தெரிவித்தார்.