ஆசிரியர்கள் பணி நியமன அனுமதி அதிகாரிகள் இழுத்தடிக்க முடியாது: இனி எதிர்பார்ப்பது கஷ்டம்
ஆசிரியர்கள் பணி நியமன அனுமதி அதிகாரிகள் இழுத்தடிக்க முடியாது: இனி எதிர்பார்ப்பது கஷ்டம்
UPDATED : நவ 12, 2026 02:21 PM
ADDED : நவ 12, 2026 02:21 PM
மதுரை:
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நியமனங்களுக்கு அனுமதி அளிக்க கால நிர்ணயம் விதிக்கப்பட்டதன் மூலம் அதிகாரிகள் 'எதிர்பார்ப்புக்கு' கல்வித்துறையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அரசு உதவிபெறும், சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர், அலுவலர் நியமன அனுமதிக்கான 'பைல்'கள் வட்டாரக் கல்வி அலுவலகம் (பி.இ.ஓ.,), மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் (டி.இ.ஓ.,) பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக மதுரை உட்பட பல மாவட்டங்களில் பள்ளிகள், பாதிக்கப்பட்டோர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு தீர்வுகாணும் வகையில் பைல்களை கிடப்பில் போடுவதை தடுக்க, 'நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிட அனுமதி, முறையாக மேற்கொள்ளப்படும் பணி நியமன 'பைல்'கள் மீது சம்பந்தப்பட்ட பி.இ.ஓ.,க்கள் 15 நாட்களிலும், டி.இ.ஓ.,க்கள் 21 நாட்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், பணிநியமன அனுமதி வழங்கும் அதிகாரியின் 'எதிர்பார்ப்பு' நிறைவேறாவிட்டால் பைல்கள் பல மாதங்கள் கிடப்பில் இருக்கும்.
இந்த கால நிர்ணயத்தால் இனி அவர்கள் இழுத்தடிக்க முடியாது. அனுமதி வழங்க முடியுமா இல்லை அதற்கான காரணம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றனர்.
