அரசுப்பள்ளிக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிய ஆசிரியர்
அரசுப்பள்ளிக்கு சொந்த செலவில் கழிப்பறை கட்டிய ஆசிரியர்
UPDATED : மார் 01, 2025 12:00 AM
ADDED : மார் 01, 2025 09:47 AM
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதி செய்யக்கோரி பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் தனது சொந்த செலவில் கழிப்பறை வசதி செய்துள்ளார்.
திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. 62 மாணவர்கள் படிக்கின்றனர். நுாறு ஆண்டுகளை கடந்த இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை வசதி, குடிநீர் வசதியில்லை. இது குறித்து தலைமை ஆசிரியர் கதிரவன், பள்ளி மேலாண்மை குழு சார்பில் அதிகாரிகளை சந்தித்து வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை.
கழிப்பறை வசதியில்லாமல் மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனால் தலைமை ஆசிரியர் கதிரவன் தனது சொந்த பணம் ரூ.65 ஆயிரத்தில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தார்.
இது குறித்து கதிரவன் கூறியதாவது:
கழிப்பறை வசதி செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியும் பயனில்லை. மாணவிகள் கழிப்பறை செல்லாமல் இருக்க தண்ணீர் குடிக்காமல் இருந்தனர். இதனால் அவர்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனால் சொந்த செலவில் கழிப்பறை வசதி செய்து கொடுத்தேன் என்றார்.
தலைமை ஆசிரியர் கதிரவனை திருவாடானை மக்கள் பாராட்டினர்.