UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 12:06 PM
சென்னை:
லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி முகவர்களாக செயல்பட, ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக வரும், 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.
அரசியல் கட்சியினர் ஓட்டு சேகரிப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிகளில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அலுவலர் பணி வழங்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தால், பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சில மாவட்டங்களில், தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற்றுவிட்டு, ஆசிரியர்கள் பலர், தாங்கள் சார்ந்த கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களாகவும், ஓட்டுச்சாவடிக்கு வெளியில் செயல்படும் கட்சி முகவர்களாகவும் செயல்பட உள்ளதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, 'அரசிடம் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், எந்த கட்சிக்கும் ஆதரவான முகவர்கள் மற்றும் பிரதிநிதிகளாக தேர்தலில் செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால், பணி நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியே, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.