வகுப்பறையில் மொபைல் போன் ஆசிரியர்கள் பயன்படுத்த தடை
வகுப்பறையில் மொபைல் போன் ஆசிரியர்கள் பயன்படுத்த தடை
UPDATED : ஆக 08, 2025 12:00 AM
ADDED : ஆக 08, 2025 06:10 PM
பெங்களூரு:
பள்ளிகளில் வகுப்பு நடக்கும்போது, ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
பள்ளிகளில் வகுப்பு நடக்கும்போது, ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து, கல்வித்துறைக்கு தகவல் வந்துள்ளது. வகுப்பு நடக்கும்போது, ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதால், சிறார்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே வகுப்பு நடக்கும்போது, ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது.
பள்ளிகளில் மாணவர்கள் தொந்தரவின்றி கல்வி கற்க, நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும். வகுப்பு நடக்கும்போது, மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்ற தடையுத்தரவு, ஏற்கனவே அமலில் உள்ளது. இதை சரியாக பின்பற்றுவது இல்லை.
இந்த தடையில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களும் கூட, வகுப்பு நடத்தும்போது, மொபைல் போன் பயன்படுத்த கூடாது.
இந்த உத்தரவை மீறுவதாக ஆசிரியர்கள் மீது புகார் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் ஆக்கப்படுவர். இவர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.
பள்ளிகளில் ஒழுங்கை காப்பாற்றுங்கள். மாணவர்களின் கல்விக்கு, எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.