UPDATED : அக் 04, 2025 10:33 AM
ADDED : அக் 04, 2025 10:34 AM
மதுரை:
'மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை ஆசிரியர் கூட்டுறவு நாணயச் சங்கம் ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படுகிறது' என மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சதீஷ்குமாரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
பேரவை மாநில சட்ட செயலாளர் பாலமுருகபாண்டியன், பொதுச் செயலாளர் குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜெயசந்திரன், டேவிட் ஆழ்வார் அளித்த மனு விவரம்: இக்கூட்டுறவு நாணயச் சங்கத்தில் 750 ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நான்கு ஆண்டுகளாக கடன் வாங்கிய ஆசிரியர்கள் வரவு செலவு கணக்கு பராமரிக்கப்பட்டது. தற்போது செயல்பாடுகள் முடங்கியுள்ளது.
ஆசிரியர்கள் சம்பளத்தில் கடனுக்கு பிடித்தம் செய்த பின் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்ற கேட்புப் பட்டியல் ரசீது வழங்காதது உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. கடன் கேட்கும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். பொறுப்பு செயலாளர் காளிமுத்து உரிய பதில் அளிப்பதில்லை. இது கண்டிக்கத்தக்கது.
உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.