ஆசிரியர்கள் பயப்பட தேவையில்லை; அமைச்சர் மகேஷ் உறுதி
ஆசிரியர்கள் பயப்பட தேவையில்லை; அமைச்சர் மகேஷ் உறுதி
UPDATED : செப் 05, 2025 12:00 AM
ADDED : செப் 05, 2025 11:04 PM

சென்னை:
அனைத்து ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, ஆசிரியர் சங்கத்தினருடன் அமைச்சர் மகேஷ் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்றம் தீர்ப்பால், தமிழகத்தில் 1.75 லட்சத்துக்கும் அதிமான ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
அவர்களின் வாழ்வாதாரத்தையும், மாணவ சமூகத்தையும் பாதுகாக்க, நீதிமன்றத்தை நாடுவது, சிறப்பு தகுதித்தேர்வு நடத்துவது, அதில், ஆசிரியர்களின் பணி அனுபவம், அவர்களின் பணி சிறப்புகள் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
முதல்வர் தமிழகம் திரும்பியதும், உரிய முடிவு எடுக்கப்படும். இதில், அரசியல் கடந்து அனைவரும் இணைந்து, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் யாரும் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதோர், மற்றும் 2030க்குள் ஓய்வு பெறுவோர் விபரங்களை சேகரித்து அனுப்பும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணி துவங்கி உள்ளது.