31 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
31 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
UPDATED : ஜூலை 30, 2024 12:00 AM
ADDED : ஜூலை 30, 2024 10:22 AM
சென்னை:
தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, டிட்டோ ஜாக் அமைப்பினர், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை மற்றும் எழும்பூரில் உள்ள சமூக நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, டிட்டோஜாக் அமைப்பின் மாநில தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:
இதுவரை, பள்ளிக்கல்வி துறை, ஒன்றிய அளவிலான பதவி உயர்வு வழங்கி வந்த நிலையில், தற்போது, 243 என்ற அரசாணையை வெளியிட்டு, தமிழக அளவிலான பதவி உயர்வு வழங்குகிறது.
இதனால், ஒரு ஆசிரியர் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நிலையில், 250 கி.மீ., துாரத்துக்கு அப்பால் உள்ள ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், ஆசிரியைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதிய அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையாக, இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம், பிடிக்கப்பட்ட ஒப்படைப்பு ஊதியம் வழங்குதல், இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தை கைவிடல் உள்ளிட்ட, 31 கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று நாள் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை ஏற்கப்படும்
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியதாவது:
போராடும் ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியமான ஆறு கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளோம். இன்று அவர்களுடன், பள்ளிக்கல்வி துறை செயலர் பேச உள்ளார்.
அவர் பேசிய பின், நிதிநிலை சார்ந்த, சாராத பிரச்னைகளில் உடனடியாக நிறைவேற்றும் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.