UPDATED : அக் 17, 2025 07:32 AM
ADDED : அக் 17, 2025 07:33 AM
அன்னுார்:
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து தாலுகாக்களிலும் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்தது.
இதன்படி நேற்று மாலை அன்னுார் பயணியர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை அட்டைகளை அணிந்தபடி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வீராசாமி உள்பட ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.