ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தம் தன்னார்வலர்களை நியமிக்க எதிர்ப்பு
ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தம் தன்னார்வலர்களை நியமிக்க எதிர்ப்பு
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 08:59 AM

அன்னுார்:
துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணை எண் 243 ஐ வாபஸ் பெற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை :
அன்னுார் வட்டாரத்தில் உள்ள 75 துவக்க, 16 நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். கல்வி துறை அதிகாரிகள், தன்னார்வலர்களை வைத்து பள்ளியை திறக்கச் செய்து பள்ளி செயல்பட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தவறான முன்னுதாரணம்.
நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பள்ளியை திறந்து பள்ளியை செயல்பட வைத்தால் பல்வேறு தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே ஆசிரியர்களை தவிர மற்றவர்களை கொண்டு பள்ளியை திறக்கும் முயற்சியை கல்வித் துறை அதிகாரிகள் கைவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.