UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 09:00 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில், உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது.
உலக எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, பொள்ளாச்சி அருகே நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 'மாஸ் ரீடிங்' என்ற வாசிப்பு பெரும் நிகழ்வு நடந்தது.
அதில், பள்ளி கல்வித்துறை வாயிலாக வழங்கப்பட்ட வாசிப்பு இயக்க புத்தகங்களான நுழை, நட, ஓடு, பற என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கதை புத்தகங்களை வாசித்தனர். அதில், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்து வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் மாணவர்கள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வாசிப்பு ராஜா, வாசிப்பு ராணி என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என சிறு முயற்சி எடுக்கப்பட்டது. வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, வேகமாகவும், அதே சமயம் உரிய உச்சரிப்புடன் பிழையின்றி வாசிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதன் வாயிலாக மாணவர்களிடம் புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துள்ளோம், என்றனர்.