UPDATED : அக் 07, 2024 12:00 AM
ADDED : அக் 07, 2024 09:07 AM

பல்லடம்:
ஆசிரியர் உழைப்பு - பெற்றோர் ஒத்துழைப்பு காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்வதாக கூறுகிறார் அமைச்சர் சாமிநாதன்.
பல்லடம் அருகே குன்னாங்கல்பாளையம் ஓடையில், தோட்டக்கலைத்துறை சார்பிலான பனை விதைகள் நடும் நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பனை விதைகள் நட்டு வைத்தனர். 2023--24ம் ஆண்டு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக, பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, திருப்பூர் மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி, 4ம் மண்டல தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
கடந்த கல்வியாண்டு பொதுத்தேர்வில், பிளஸ் 2வில், திருப்பூர் மாவட்டம், 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதற்கு, தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்கள் மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பே காரணம். தமிழக அரசு நடவடிக்கையால், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களின் உழைப்பு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் தான் இதற்கு முழு காரணம். இவ்வாறு சாமிநாதன் கூறினார்.
கல்விச் செல்வம் ஒன்றே வாழ்க்கையில் வழிகாட்டக் கூடியது. கடந்த கல்வியாண்டில், தமிழ் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்ற மொத்த மாணவியர், 8 பேரில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஆறு பேர். இதேபோல், நீட் தேர்வு எழுதிய, 436 பேரில், 245 மாணவர்கள் மருத்துவ கல்லுாரியில் சேர தகுதி பெற்றனர், இதில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மட்டும், 38 பேர் பயனடைந்துள்ளனர். இதிலும், நமது மாவட்டம்தான் முதலிடம் பெற்றுள்ளது.
இவ்வாறு கூறினார்.