பதவி, ஊதிய உயர்வின்றி தொழில்நுட்ப ஊழியர்கள் குமுறல்
பதவி, ஊதிய உயர்வின்றி தொழில்நுட்ப ஊழியர்கள் குமுறல்
UPDATED : ஏப் 18, 2025 12:00 AM
ADDED : ஏப் 18, 2025 09:15 AM
கோவை:
அரசாணை வெளியிட்டு, 14 ஆண்டுகளாகியும், பதவி மறுசீரமைப்பு மேற்கொள்ளாததால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்காமல் அவதிப்படுவதாக தொழில்நுட்ப ஊழியர்கள் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, காரைக்குடி, சேலம், கோவை, திருநெல்வேலி, தர்மபுரி உள்ளிட்ட, 11 இடங்களில் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 100க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பல ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இதையடுத்து தொழில்நுட்ப ஊழியர்களின் தொடர் போராட்டங்களின் வாயிலாக, பதவிகளை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து, 14 ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்ப ஊழியர்களின் பதவிகளை மறுசீரமைப்பு செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது வரை பதவி மறுசீரமைப்பு நடக்கவில்லை.
இதன் காரணமாக ஊழியர்கள் உரிய காலத்தில், பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், அரசாணையை செயல்படுத்த ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசாணையை செயல்படுத்தாதபட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கூறுகையில், பதவி உயர்வு, ஊதிய உயர்வு உரிய நேரத்தில் கிடைக்காமல் பலரும் திண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், எங்கள் கோரிக்கை குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்தகட்டமாக போராட்டம் நடத்த தீர்மானித்த போது துறைக்கு புதிதாக கமிஷனர் நியமிக்கப்பட்டார். அதையடுத்து தற்காலிகமாக கைவிட்டோம். கமிஷனரை சந்திக்க பலமுறை அனுமதி கோரியும் எவ்வித பதிலும் இல்லை.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றால், கூட்டம் நடக்கும் அன்று தான் தகவல் தருகின்றனர். ஊழியர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்க்கின்றனர். இதையடுத்து அடுத்தகட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.