UPDATED : ஜூலை 20, 2024 12:00 AM
ADDED : ஜூலை 20, 2024 10:00 AM
கோவை:
மைக்ரோசாப்ட் மென்பொருள் தொழில்நுட்ப கோளாறால், கோவையிலிருந்து புறப்படும் நான்கு இண்டிகோ விமானங்கள் ரத்தானது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, உலக அளவில் விமான சேவைகள் மற்றும் பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகின.
காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை பாதிப்பு இருந்தது. கோவையில் இண்டிகோ நிறுவனம் சார்பில் இயங்கும் நான்கு விமானங்கள், நேற்று ரத்து செய்யப்பட்டன. கோவையிலிருந்து சென்னைக்கு செல்லும் இரண்டு விமானங்களும், பெங்களூரு, ஹைதராபாத் செல்லும் நான்கு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன.
மாற்று ஏற்பாடாக, இண்டிகோ விமான நிறுவனம், அவசரமாக செல்வோருக்கு வேறு விமானத்தில் இடவசதி ஏற்படுத்தி கொடுத்தனர்.
சிலருக்கு கட்டண தொகை திரும்ப கொடுத்தனர். சிலர் பயண நாட்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டனர். விமான நிலைய சேவைகளிலும், பிற விமான போக்குவரத்து சேவைகளிலும் மாற்றங்கள் எதுவும் இல்லை.