UPDATED : அக் 02, 2026 06:24 PM
ADDED : அக் 02, 2026 06:25 PM
திருப்பூர்:
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது, மாணவர்களுக்கு வழங்குவதற்காக திருப்பூர் மாவட்டத்துக்கு 1.26 லட்சம் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை பின்பற்றப்படுகிறது. கல்வியாண்டு தொடங்கியதும் ஜூன் மாதத்தில் முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. கடந்த செப்., 13 முதல் 23ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்டு, 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து அக்., 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 217 இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதில், 5ம் வகுப்புக்கு அதிகபட்சமாக 22 ஆயிரத்து 768 புத்தகங்களும், 7ம் வகுப்புக்கு குறைந்தபட்சமாக 13 ஆயிரத்து 911 புத்தகங்களும் உள்ளன.
வகுப்பு வாரியாக 1ம் வகுப்புக்கு 16,280, 2ம் வகுப்புக்கு 18,394, 3ம் வகுப்புக்கு 20,214, 4ம் வகுப்புக்கு 19,548, 5ம் வகுப்புக்கு 22,768, 6ம் வகுப்புக்கு 15,192, 7ம் வகுப்புக்கு 13,911 புத்தகங்கள் வந்துள்ளன.
புத்தகங்கள் வட்டாரம் வாரியாக பிரிக்கப்பட்டு, அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நேற்று தொடங்கியது. அக்., 5ம் தேதி பள்ளிகள் திறக்கும்போது, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா கூறுகையில், “ஆக., 31ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிந்ததால், தேவையான புத்தகங்களின் எண்ணிக்கை குறித்து தகவல் சேகரித்து, செப்., முதல் வாரத்திலேயே பாடநூல் கழகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
புத்தகங்கள் குப்பாண்டாம்பாளையம் பள்ளியிலும், நோட்டுகள் மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன. வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இன்று மாலைக்குள் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
