உடல் திடப்படும்... மனம் நிலைப்படும்... உயிர் பலப்படும் யோகா மகத்துவம்
உடல் திடப்படும்... மனம் நிலைப்படும்... உயிர் பலப்படும் யோகா மகத்துவம்
UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM
ADDED : ஜூன் 21, 2024 09:39 AM

மருத்துவம், அறிவியலின் மகத்தான வளர்ச்சியை தாண்டி, உயிர் காக்கும் உன்னத ஆற்றல், ஆயுளை நீட்டிக்கும் அற்புத சக்தி, யோக கலைக்கு உண்டு. இந்த பேருண்மை, இன்று ஊரறிந்த, உலகறிந்த விஷயமாக மாறி, யோக கலையை ஏராளமானோர் கற்று தேர்ந்து வருகின்றனர். முழு உடல் ஆரோக்கியத்துடன், நோயின்றி வாழும் நிலையை, யோகக் கலை தந்துக் கொண்டிருப்பதே, இக்கலையின் அசுர வளர்ச்சிக்குக் காரணம்.
இக்கலையை பட்டி, தொட்டியெங்கும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் தான், ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதன்படி, இந்தாண்டின் கருப்பொருள், சுய மற்றும் சமூகத்திற்கான யோகா என்பதாகும். உடல் மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
நோயற்ற வாழ்வுக்கு ஆதாரம்
முரளி, செயலாளர், திருப்பூர் மன வளக்கலை மன்ற அறக்கட்டளை:
ஒரு காலகட்டத்தில் செல்வந்தர்கள், மேல் தட்டு மக்கள் மட்டுமே கற்று தேர்ந்த யோகா, இன்று, அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது. முன்பெல்லாம், யோகா கற்க, மக்களை தேடி அழைத்து வர வேண்டிய நிலை மாறி, யோக கலையை கற்க எங்களை தேடி மக்கள் வருகின்றனர். அந்தளவு, அதன் வலிமை, ஆற்றல் உணரப்பட்டிருக்கிறது. நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டுள்ள நிலையில், யோகக் கலை மட்டும் தான், நோயற்ற வாழ்வை தரும் என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட பிரதமர் மோடிதான் முக்கியக்காரணம். இதன் விளைவு தான், இவ்வளவு வேகமாக யோக கலை பிரபலமாக காரணம்.
நோய் பறந்து போகும்
ரகுபாலன், நிறுவனர், தபஸ் யோகாலயா:
கொரோனாவுக்கு பின் யோகக் கலையை கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அனைத்து பள்ளிகளும், மாணவ, மாணவியருக்கு யோகக் கலையை கற்றுத்தருகின்றன. அனைவரும் முறையாக யோகக்கலையை பின்பற்றுவதில்லை; அதில், 20 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆர்வமுடன் கற்றுக் கொள்கின்றனர். தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு ஏற்படுகிறது; பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சியும் பெற்றுக் கொள்கின்றனர். பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், மூட்டு வலியால் உட்கார முடியாமல் சிரமப்பட்ட பலர் யோகக் கலையை கற்று, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
எதிர்கால நம்பிக்கை
சந்தியா, பயிற்சியாளர், ஹார்ட்புல்னெஸ்:
சமீப ஆண்டுகளாக, உலகம் முழுக்க யோகக் கலை மீதான வரவேற்பு அதிகரித்திருக்கிறது. இது, உடற்பயிற்சி மட்டுமல்ல; உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு கலை. இன்றைய இயந்திரத்தனமான உலகில், மன அழுத்தம் மற்றும் பதட்டம் நிறைந்த வாழ்க்கையில் யோகா பயிற்சி, இந்த சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. யோகாவின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக மாறியிருக்கிறது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில், யோகாசனத்தை இணைத்துக் கொள்ள துவங்கியுள்ளனர்.
இன்று(ஜூன் 21) சர்வதேச யோகா தினம்
சக்தி நிச்சயம்
திருப்பூரைச் சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவி சக்தி சஞ்சனா என்பவர், யோகக் கலையில் பல்வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை அள்ளிக்குவிக்கிறார். இவரது சாதனைக்கு ஒரு மைல் கல்லாக, தேசிய அளவில் நடந்த கேலோ இந்தியா பெண்கள் யோகாசன போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
அவரது தந்தை திருமுருகன் கூறுகையில், சிறு வயதில் இருந்தே, சஞ்சனாவுக்கு யோகா நன்றாக வந்தது. நல்ல முறையில் கற்றுத் தேர்ந்த அவர், எந்தவொரு போட்டியில் பங்கு பெற்றாலும் வெற்றி பெறறு வந்தார். முன்பெல்லாம் சளி, காய்ச்சலால் அடிக்கடி பாதிக்கப்பட்டு, மருத்துவரிடம் சென்ற நிலை மாறி, தற்போது முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்றார்.
என்னென்ன பலன்?
யோகா பயிற்சியை முறையாகச் செய்துவந்தால், உடல் எடை சீராகும். நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். நல்ல எண்ணங்கள் மலரும். இதயம் இதமாகும். பார்வை தெளிவாகும். ஒழுக்கம் இயல்பாகும். நுரையீரல் திறன் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் சீராகும். உடல் இலகுவாகும். நரம்பு மண்டலம் சீராகும். ஜீரண சக்தி சீராக இருக்கும். மூட்டுகள் பலமடையும். ஆழ்ந்த உறக்கம் வரும். ஆன்மிக சிந்தனை வளரும்.இன்னும் ஏராளமான பலன்கள் உள்ளன.