UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 09:49 AM

திருப்பூர்:
திருப்பூர், பல்லடம் ரோட்டில், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல் லுாரி செயல்படுகிறது. மாவட்டத்திலேயே அதிகமாக இளங்கலை இடங்கள் கொண்ட, அதிகளவில் மாணவியர் (4,700 பேர்) படிக்கும் ஒரே கல்லுாரி.
ஆனால், இங்கு பஸ் ஸ்டாப் இல்லை. பல்லடத்தில் இருந்து திருப்பூர் வரும் மாணவியர் தமிழ்நாடு தியேட்டர் ஸ்டாப்பிலும், திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் டவுன் பஸ்சில் செல்லும் மாணவியர் கலெக்டர் அலுவலக ஸ்டாப்பிலும் இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.
தொடர் வலியுறுத்தலுக்கு பின் குறிப்பிட்ட சில டவுன் பஸ்கள் மட்டும் நின்று சென்றது. இதுவும் படிப்படியாக குறைய, மினி பஸ்கள் கலெக்ஷன் அள்ளின. இலவச பஸ் பாஸ் வைத்திருந்தும், மாணவியருக்கு டவுன் பஸ் இலவச பயணத்துக்கு அனுமதி அளித்தும், கல்லுாரி முடிவடையும் நேரத்துக்கு டவுன் பஸ் இல்லாததால், மாணவியர் சிரமம் தொடர்ந்தது.
கல்லுாரி நிர்வாகம், மாணவியர் தொடர்ந்து வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தி வந்தனர். நீண்ட இழுபறிக்கு பின், மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு, போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
நேற்று மதியம் கல்லுாரி முடிந்தவுடன் மாணவியரை, மத்திய பஸ் ஸ்டாண்ட் அழைத்துச் செல்ல, அரசு டவுன் பஸ் கல்லுாரிக்கே வந்தது. மாணவியர் மகிழ்ச்சியடைந்து உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.
ஐந்து நிமிடம் காத்திருந்து பஸ், மாணவியரை அழைத்துச் சென்றது.