அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த புதுகை ஆடை வடிவமைப்பாளர்
அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த புதுகை ஆடை வடிவமைப்பாளர்
UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:22 AM
புதுக்கோட்டை :
புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் அமெரிக்கர்களின் மனம் கவர்ந்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அமிர்தா அரசு, 24. சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் ஜவுளி மற்றும் கைத்தறி ஆடைகள் வடிவமைப்பு துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த இவர் அமெரிக்காவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.
கைத்தறி வடிவமைப்பில் அதிக ஈடுபாடு காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கைத்தறி நெசவாளர்களுடன் இணைந்து பாரம்பரிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டார்.
அதன் வாயிலாக வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் பயன்படுத்தும் வகையில், தரை விரிப்புகள், ஜமுக்காளம், ஷோபாக்களில் பயன்படுத்தப்படும் தலையணைகள், மெத்தைகள், பணப்பை, கைப்பை, உணவு எடுத்துச்செல்லும் பைகள் என்று புதிய வடிவமைப்புகளை உருவாக்கினார்.
இவரது படைப்புகள் நியூயார்க் நகரில் நடந்த ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் இடம்பெற்று பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அமிர்தா அரசு கூறுகையில், “கைத்தறி ஜமுக்காளத்தில் சில நுட்பங்களையும், சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து, ஜமுக்காளத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சி தான் இது.
என் திட்டத்துக்காக, கைவினை பொருட்கள் ஜவுளி அமைச்சகம் நிதி அளித்துள்ளது. தொடர்ந்து, புதிய சந்தையை உருவாக்குவதன் வாயிலாக நலிவடைந்த பவானி நெசவாளர்கள், கைவினை கலைஞர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். மேலும், ஜவுளித்துறையில் இந்திய பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்றார்.