மும்மொழி கல்வி எங்கள் உரிமை கோலம் வரைந்த இல்லத்தரசியர்
மும்மொழி கல்வி எங்கள் உரிமை கோலம் வரைந்த இல்லத்தரசியர்
UPDATED : பிப் 24, 2025 12:00 AM
ADDED : பிப் 24, 2025 10:04 AM

பல்லடம்:
மும்மொழி கல்வி எங்கள் உரிமை என, பல்லடத்தில், இல்லத்தரசியர் கோலமிட்டு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.
மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையின்படி, அந்தந்த மாநில தாய் மொழி முதல் பாடமாகவும், ஆங்கிலம் இரண்டாவதாகவும், மூன்றாவதாக தங்களுக்கு விருப்பமான ஹிந்தி உள்ளிட்ட ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மும்மொழி கல்விக் கொள்கை என்று சொல்லி ஹிந்தியை திணிக்கக்கூடாது என, தமிழகத்தில், தி.மு.க., உட்பட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், தொழில் துறையினர், ஆசிரியர்கள், கல்வி வல்லுனர்கள் உட்பட பலரும், மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள சில வீடுகளில், 'மும்மொழி கல்வி, எங்கள் உரிமை என, இல்லத்தரசிகள் பலர், தங்கள் வீடுகள் முன் கோலம் வரைந்து, தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
பச்சாபாளையத்தைச் சேர்ந்த இல்லத்தரசி மல்லிகா கூறுகையில், தாலியை அடமானம் வைத்து தான் எனது மகனையும் மகளையும் படிக்க வைத்தோம். எனது மகன், அரசு பள்ளியில் படித்து, ஐ.டி., வேலையில் உள்ளான். ஹிந்தி, ஆங்கிலம் தெரியாமல் மிகவும் சிரமப்பட்டான். மாணவர்கள், பன்மொழியில் புலமையுடன் இருப்பது அவசியம். தமிழகத்தில் மட்டுமல்ல, எங்குமே ஹிந்தி திணிப்பு இல்லை.
தனியார் பள்ளி மாணவர்கள் ஹிந்தியை கற்கின்றனர். நம்மால், அது முடியவில்லையே என்ற ஏக்கம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நாளும் ஏற்படக்கூடாது. அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஏற்பதுதான் ஒரே வழி. எனவேதான், மும்மொழி கல்வி கட்டாயம் வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக, எங்கள் பகுதியில் உள்ள சில வீதிகளில் கோலம் வரைந்தோம் என்றார்.