சர்வசேத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் பட்டியலில் தேனி கணிதத்துறை விஞ்ஞானி தேர்வு
சர்வசேத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் பட்டியலில் தேனி கணிதத்துறை விஞ்ஞானி தேர்வு
UPDATED : செப் 30, 2025 09:41 AM
ADDED : செப் 30, 2025 09:42 AM
தேனி:
அமெரிக்க பல்கலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் தேனியை சேர்ந்த கணித ஆராய்ச்சியாளர் பிரதாப் அன்பழகன் தேர்வாகி உள்ளார். இவர் தற்போது சீனாவின் சென்சென் பல்கலையில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் தலைமையிலான குழுவினர் சர்வதேச அளவில் 22 அறிவியல் துறைகள், அதனுடைன் தொடர்புடைய 176 துணை துறைகளில் சிறந்து விளங்கும் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டனர்.
அதில் இயற்பியல், உயிரியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் தேர்வாகினர். இந்தியாவில் இருந்து பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வாகி உள்ளனர்.
அதில் தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த பிரதாப் அன்பழகன் 32, தேர்வாகி உள்ளார். இவர் கணிதப் பாடப்பிரிவில் கணக்கு பயன்பாட்டியியல் பிரிவில் தேர்வாகி உள்ளார்.
அவர் கூறியதாவது:
ஆய்வுப் படிப்பில் தேர்ச்சி பெற்ற பின் தென்கொரியாவின் குல்சான் தேசிய பல்கலையில் பணிபுரிந்தேன். அப்போது காற்றாலை உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். இதனால் கடந்தாண்டு இந்த பட்டியலில் தேர்வானேன்.
தற்போது சீனாவில் சென்சென் பல்கலையில் மல்டி ஏஜன்ட் கன்ட்ரோல் என்ற தலைப்பில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளேன்.
இதுவரை 51 ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவை அடிப்படையில் தேர்வு செய்துள்ளனர். இரண்டாவது முறையாக தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.