அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகள் நடப்பாண்டில் இல்லை ஆர்.டி.ஐ., தகவலால் உறுதியானது
அரசு கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகள் நடப்பாண்டில் இல்லை ஆர்.டி.ஐ., தகவலால் உறுதியானது
UPDATED : ஆக 21, 2024 12:00 AM
ADDED : ஆக 21, 2024 08:34 AM

கோவை:
அரசு கல்லுாரிகளில் நடப்பாண்டில் புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படாது என, ஆர்.டி.ஐ., மனு வாயிலாக தெரியவந்துள்ளது.
மாநில அளவில், ஆண்டுதோறும் அரசு கல்லுாரிகளில் அந்தந்த பகுதிகளின் வளர்ச்சி, மாற்றங்கள், தேவை அடிப்படையில், புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படும். நடப்பாண்டில்,இதுகுறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.
கடந்த, ஜூன் மாதமே அனைத்து கல்லுாரிகளிலும், புதிதாக துவங்க வேண்டிய பாடப்பிரிவுகள் குறித்த கருத்துரு கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில், பல அரசு கல்லுாரிகள் புதிய படிப்புகள் துவங்கப்படும் என காத்திருந்தனர். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
இதுகுறித்து, ஓய்வு பெற்ற பேராசிரியர் ரவிசங்கர் கூறியதாவது:
கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலக அறிவுறுத்தலின் படி, பல அரசு கல்லுாரி முதல்வர்கள், புதிய பாடப்பிரிவு துவங்கும் என்ற தற்காலிக அறிவிப்பை வெளியிட்டு விட்டனர். இதனால், பல மாணவர்கள் ஒரு துறையில் சேர்ந்து, வேறு புதிய பாடப்பிரிவில் மாறிக்கொள்ள காத்திருக்கின்றனர்.
புதிதாக துவங்கவுள்ள படிப்புகளின் விபரங்களை, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டபோது, புதிதாக பாடப்பிரிவுகள் துவங்கப்படவில்லை என பதில் அளித்துள்ளனர். இதனால், நடப்பாண்டில் மாணவர்கள் காத்திருக்காமல், தற்போது சேர்ந்துள்ள துறைகளிலேயே ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்.
கல்லுாரி கல்வி இயக்குனரகம், இதுபோன்ற அறிவிப்புகளை சரியான நேரத்தில் அதிாரப்பூர்வமாக அறிவிக்காமல், அலட்சியம் காண்பிப்பது மாணவர்களை நேரடியாக பாதிக்கும்.
இவ்வாறு கூறினார்.