எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது
UPDATED : பிப் 06, 2025 12:00 AM
ADDED : பிப் 06, 2025 11:41 AM
பனசங்கரி:
இந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படாது என மாநில தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு, பனசங்கரியில் உள்ள டி.சி.இ.ஆர்.டி., எனும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை அலுவலகத்தில் மாணவர்கள், பெற்றோருடன் தொடக்கக் கல்வி துறை அமைச்சர் மதுபங்காரப்பா ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இம்முறை எஸ்.எஸ்.எல்.சி., இறுதித் தேர்வில் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளோம். தேர்வு அறைகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை 'வெப் காஸ்டிங் மற்றும் கண்காணிப்பு கேமரா சோதனை முறையில் கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ரத்து
கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், மாணவ - மாணவியருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டன. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, எக்காரணத்தை கொண்டும், இந்தாண்டு கருணை மதிப்பெண் வழங்கப்படாது.
அத்துடன், ஒவ்வொரு மாவட்டத்தின் முதன்மை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வப்போது சிறுசிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதன்மை செயல் அதிகாரிகளே கேள்விகளை தயார் செய்து, தேர்வுகளை நடத்தி வருகின்றனர். ஒரு அதிகாரி, 2 - 3 பள்ளிகளை வழிநடத்துவார். அத்துடன் குழுவாக சேர்ந்து பாடம் கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைமுறையையும், தேர்வில் தோல்வி அடைந்தால், மீண்டும் மறு தேர்வு எழுதி பள்ளியில் சேரலாம் என்பதையும் மாணவர்கள் புரிந்து கொண்டனர். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து நேற்று ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதுபோன்று மாவட்ட கலெக்டர்கள், முதன்மை செயல் அதிகாரிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது.
அழுத்தம்
இம்முறை எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என, பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, கல்வித் துறை பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. அதில் ஒன்று தான் ஒரு நாளுக்கு ஒரு மதிப்பெண் திட்டம். இதன் மூலம் மாணவர்கள் காலை நேரத்தில், தேர்வுக்கு படிக்குமாறு அறிவுறுத்தப்படுவர். அத்துடன் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வகுப்புகள், இணையதளம் வசதிகள் வேண்டும் என மாணவர்கள் கேட்டுள்ளனர். இதற்கு கல்வி துறை நடவடிக்கை எடுக்கும். மாணவர்களின் திறனை வளர்க்க, விரைவில் திறன் வகுப்பு நடத்தப்படும்.
பள்ளிகள்
அனுமதி இன்றி இயங்கும் பள்ளிகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வமற்ற பள்ளிகள் விஷயத்தில் திடீரென முடிவெடுத்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கும்.
பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தல் விவகாரத்தில் விதிகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கட்டடம் மாற்றம், புதுப்பித்தல், தீ தடுப்பு சாதனங்கள் உட்பட குழப்பங்களை நீக்க, வழிமுறைகள் கூறப்பட்டு உள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வின்போது, ஹிஜாப் எனும் முஸ்லிம் பெண்கள், தலை, முகத்தை மறைக்கும் ஆடை அணியும் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து பேச முடியாது. அதேவேளையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் பேசி முடிவெடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.