UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 03:32 PM

சென்னை:
பொய் புரட்டு பரப்புவதில், தி.மு.க., - ஐ.டி., பிரிவை விஞ்சுபவராக சபாநாயகர் அப்பாவு உள்ளார் என, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொய்களையும் புரட்டுகளையும் பரப்பி, மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதில், தி.மு.க., சமூக வலைத்தள பிரிவினரை விஞ்சும் அளவுக்கு, சபாநாயகர் அப்பாவு பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்தில் வேண்டும் என, கோரிக்கை வைத்தது தமிழக அரசுதான். ஸ்ரீ பள்ளிகள் என்பது, புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம் என்பது, தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும். புதிய கல்விக் கொள்கையில் இணையாமல், ஸ்ரீ பள்ளிகள் மட்டும் வேண்டும் என்று கேட்பது, மக்களை திசை திருப்பும் செயல்.
ஸ்ரீ பள்ளிகள் வேண்டும் என தமிழக அரசு கேட்டால், புதிய கல்விக் கொள்கையில் இணைந்த மாநிலங்களுக்கு மட்டும்தான் வழங்க முடியும் என, மத்திய அரசு கூறுவது நியாயம் தானே. இதை மக்களிடம் மறைத்து, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் இணைய கட்டாயப்படுத்துகிறது என, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.
புதிய கல்விக் கொள்கையில் கட்டாயம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. எல்லாவற்றையும் கட்டாயப்படுத்தி மாநிலங்கள் மீது திணிக்க, மத்தியில் இருப்பது காங்கிரஸ் அரசல்ல.
புதிய கல்விக் கொள்கை, ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறது என, அப்பாவு கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் தேவையே இல்லை. காங்கிரஸ் திணித்த ஹிந்தியும் தேவை இல்லை; தாய்மொழிதான் தேவை.
தமிழ், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, மலையாளம், ஒடியா போன்ற செம்மொழிகளில், ஏதேனும் ஒன்றை மாணவர்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என, மாணவர்களுக்கு சுதந்திரத்தை கொடுப்பதுதான் புதிய கல்விக் கொள்கை.
தமிழ் உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளை, அனைத்து மாநில மாணவர்களும் கற்க வழிவகுக்கிறது. ஆனால், சமஸ்கிருதத்தை திணிக்கிறது என, இவர்கள் வசதிக்கு மாற்றி பேசுவது, வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டும்தான்.
சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை பயிற்றுவிக்க, முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். தமிழகத்தில் சமஸ்கிருதம் பேசுபவர்களாவது, 25,000 பேர் இருப்பதாகக் கூறுகிறீர்கள். பிரஞ்சு மொழி எத்தனை கோடி பேர் பேசுகின்றனர் என, அம்மொழியை முதல்வர் திணிக்க நினைக்கிறார்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.