200 பிஎச்.டி., மாணவர்களின் ஆய்வறிக்கை ஓராண்டாக முடக்கம்!
200 பிஎச்.டி., மாணவர்களின் ஆய்வறிக்கை ஓராண்டாக முடக்கம்!
UPDATED : ஆக 07, 2026 10:12 AM
ADDED : ஆக 07, 2026 10:17 AM

சென்னை பல்கலையில் படிக்கும், பிஎச்.டி., மாணவர்கள் 200 பேரின் ஆய்வறிக்கை தொடர்பான கோப்புகள், உயர்கல்வித் துறை அதிகாரிகள் கையெழுத்திற்காக, ஓராண்டாக தேங்கி கிடக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இது, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதாக அமைந்து விடும் என்பதால், கோப்புகளை துாசி தட்ட, உயர்கல்வித் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டின் நுாற்றாண்டு பழமையான சென்னை பல்கலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், பிஎச்.டி., எனும் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு, துறை சார்ந்த வல்லுநர்கள், வழிகாட்டிகளாக செயல்படுகின்றனர். அவர்களின் துணையுடன், ஒவ்வொரு மாணவரும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வர்.
பிஎச்.டி., மாணவர்கள் குறைந்தது, மூன்று ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குள், தங்கள் ஆராய்ச்சி முடிவை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன், அந்த ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வல்லுநர் குழு
மாணவர்களின் ஆய்வு அறிக்கை, உள்நாடு மற்றும் வெளிநாடு அறிவியல் வல்லுநர்கள் பார்வைக்கு அனுப்பப்படும். வல்லுநர்களில் 12 பேரின் பெயரை, மாணவரின் வழிகாட்டியே, பல்கலையிடம் சமர்ப்பிப்பார். அதிலிருந்து மூன்று பேரை, பல்கலை தேர்வு செய்து, ஆய்வறிக்கையை அவர்களுக்கு அனுப்பும்.
தற்போது, சென்னை பல்கலையில், துணைவேந்தர் இல்லாததால், துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள மூன்று பேர், வல்லுநர்களை தேர்வு செய்ய வேண்டும்.
தற்போது, சென்னை பல்கலையில் படிக்கும், பிஎச்.டி., மாணவர்களில், 140 பேரின் ஆய்வறிக்கை, வல்லுநர்களின் பெயர் தேர்வுக்காக, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு ஒப்புதலுக்காக, ஓராண்டாக காத்திருக்கிறது.
அதே போல், வல்லுநர் குழுவுக்கு அனுப்பப்பட்டு, இறுதி செய்யப்பட்ட மாணவர்களுக்கு, முனைவர் பட்டம் வழங்குவதற்கான ஒப்புதல் கோரி, 60 கோப்புகள், துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழுவிடம் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மெத்தனம்
இது குறித்து, சென்னை பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:
பல பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததால், உயர்கல்வித் துறை செயலரே, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளார். அதனால், அனைத்து பல்கலை பிஎச்.டி., உட்பட பல்வேறு கோப்புகளுக்கு, அவர் உட்பட மூன்று பேர் கையெழுத்திட வேண்டிய சூழல் உள்ளது. இதுவே, தாமதத்துக்கு காரணம்.
இருப்பினும், சென்னை பல்கலை உயர் அதிகாரிகள், நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் கோப்புகளை, செயலரிடம் சமர்ப்பித்து கையெழுத்து பெறுவதிலும் மெத்தனமாக உள்ளனர். இந்த தாமதத்திற்கு இதுவும் ஒரு காரணம்.
உயர்கல்வித் துறை செயலர்கள், அடுத்தடுத்து மூன்று முறை மாற்றப்பட்டதும், சிக்கலுக்கு காரணமாக அமைந்துவிட்டது. மாணவர்கள் நலன் கருதி, கோப்புகளில் விரைவாக கையெழுத்திட, ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
மாணவர்களின் இன்னல்களை களைய நடவடிக்கை தேவை
பிஎச்.டி., மாணவர்கள் படிக்கும் போதே, பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவற்றை எல்லாம் கடந்து, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கின்றனர். அந்த ஆய்வறிக்கையை, வல்லுநர்களுக்கு அனுப்பும் கோப்பில் கையெழுத்திடாமல் ஓராண்டாக தாமதம் செய்வது ஏற்புடையதல்ல. இந்த செயல், ஊக்கத் தொகையுடன், வெளிநாடுகளில் கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியரின் கனவை சிதைத்துவிடும்.
துணைவேந்தர் இல்லையேல், உயர்கல்வித் துறை செயலருக்கு, பல்கலை சார்ந்த பணிகள் அதிகம் இருக்கும். எனவே, இது போன்ற விஷயங்களில், மாற்று ஏற்பாடுகளை உயர்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், வழிகாட்டிகளால், மாணவர்கள் சந்திக்கும் மோசமான இன்னல்களை களைய, தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
- நெடுஞ்செழியன், கல்வியாளர்.
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் - அண்ணா பல்கலை மோதல்
சைதாப்பேட்டை - அடையாறு வழி சர்தார் பட்டேல் சாலையின் இடதுபுறத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அதை ஒட்டி அண்ணா பல்கலை உள்ளது. இந்த இரு கல்வி நிறுவனங்களையும் இணைக்கும் வகையில், உட்புறமாக பெரிய நுழைவாயில் உள்ளது. இதன் வழியே, அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், இரு நிறுவனங்களுக்கும் சென்று வந்தனர்.
இந்த சூழலில், அண்ணா பல்கலை வளாகத்தில் ஞானசேகரன் எனும் வெளிநபரால், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலையின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன; உட்புற பெரிய நுழைவாயிலும் அடைக்கப்பட்டது. உயர் அதிகாரிகள் மட்டுமே அவ்வழியே சென்று வருகின்றனர்; மற்றவர்கள் சர்தார் பட்டேல் சாலையின் முதல் வாயிலில் வெளியேறி, சற்று துாரத்தில் உள்ள மற்றொரு நுழைவாயில் வழியாக செல்ல வேண்டியுள்ளது.
இதனால், அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது; மாற்றுத்திறன் அதிகாரிகளுக்கும் இதே நிலையே உள்ளது. அதனால், இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள நுழைவு வாயிலை மீண்டும் திறந்துவிட வேண்டும் என, தொழில்நுட்ப கல்வி இயக்கக பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு காரணங்களால் திறக்க முடியாது என, அண்ணா பல்கலை நிர்வாகம் மறுத்து வருகிறது.
