மாணவர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை: மோகன் பாகவத்
மாணவர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை: மோகன் பாகவத்
UPDATED : ஆக 07, 2026 10:11 AM
ADDED : ஆக 07, 2026 10:12 AM
மும்பை:
மாணவர்கள் மீது தனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினர் உடன் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கலந்துரையாடினார்.
முக்கியம்
அப்போது அவர் கூறியதாவது:
இளம் தலைமுறையினரை நான் கண்மூடித்தனமாக நம்புகிறேன். ஜனநாயகத்தில் பேச்சுவார்த்தைக்கான வழிமுறைகளில் போராட்டமும் ஒன்று. கலந்துரையாடலுக்கு பிறகு ஒருமித்த கருத்தை உருவாக்குவதே ஜனநாயகம். குறைகள் உண்மையானவை. மேலும், நமது நாட்டில் கல்வி அமைப்பில் நிறைய மேம்படுத்தப்பட வேண்டும். எனவே, கலந்துரையாடல் என்பது முக்கியமானது.
நாங்கள் அதிகாரிகளிடம் ஒரு போதும் கேள்வி கேட்டது இல்லை. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினர் (ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினர்), அதிகாரத்தை கேள்வி கேட்டு அதற்கு உரிய பதிலை அன்பான முறையில் பெற விரும்புகிறார்கள்.
முன்னேற்றத்திற்காக
இளம் தலைமுறையினர் போராடக்கூடாது என்று நான் ஒரு போதும் கூற மாட்டேன். ஆனால், ஜனநாயகத்தில் அதற்கும் ஒரு வழி இருக்க வேண்டும். இளைஞர்கள் குரல் எழுப்பினால், அது எதிர்ப்பதற்காக அல்ல. மாறாக முன்னேற்றத்திற்காக என்பதை நாம் பார்க்க வேண்டும்.
சட்டரீதியில்
நமது அமைப்பில் சரி செய்யப்பட வேண்டிய குறைபாடுகள் உள்ளன. மாணவர்கள் தங்களது குரலை எழுப்பி அதனை மேம்படுத்த வலியுறுத்துவதற்கு ஜனநாயக ரீதியில் உரிமை உண்டு. நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட போராட்டங்கள், ஜனநாயகத்தில் பங்கேற்பதற்கான ரீதியாக பங்கேற்பதற்கான சட்டரீதியான வெளிப்பாடாக கருத வேண்டும்.
கருணையும், புரிதலும் இருக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் நேர்மையான தலைமுறையினராக இருக்க வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். தாங்கள் சொல்வது கேட்கப்படுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். நான் ஒருவரை நம்ப வேண்டும் என்றால் இளம் தலைமுறையினரை நம்புவேன்.
கடமை
சமீபத்தில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் நடந்த மோதலின் போது சுற்றி என்ன நடந்தது என்பது பற்றி நமக்கு தெரியாது. ஆனால், சரிபார்க்கப்பட்ட தகவல்கள் இல்லாத போதும், மாணவர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
கல்வி என்பது வணிக ரீதியான தொழில் கிடையாது. கல்வி அமைப்பை மேம்படுத்த சமூகம் உதவ வேண்டும். கல்விக்கான நிதிச்சுமை பெரியதாக உள்ளது. நாம் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும். இந்த அமைப்பைத் தவறாமல் மதிப்பீடு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கல்வி கற்பிப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, அது ஒரு சமூக கடமையும் கூட.
பங்களிப்பு
பட்ஜெட்டில் கல்விக்கு ஆறு சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்பது பழைய கோரிக்கை. அரசு மட்டும் பள்ளிகளை நடத்தவில்லை. ஒரு அமைப்பாக நாங்களும் கல்வி மற்றும் கற்றலுக்காகக் கடுமையாகப் பாடுபடுகிறோம். கல்விக்கான ஒரு சமூக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
மாறுபட்ட கருத்துகளும், சீர்திருத்தக் கோரிக்கைகளும் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில் அங்கம். இளம் தலைமுறையினர் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நாட்டிற்கு நேர்மறையான பங்களிப்பை அளிக்க விரும்புகின்றனர்.
இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.
இட ஒதுக்கீடு
கல்வியில் இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு மோகன் பாகவத் கூறியதாவது:
“இந்த கேள்விக்கு நான் நேரடியாக பதிலளிக்க மாட்டேன். இட ஒதுக்கீடு குறித்து அம்பேத்கர் என்ன நினைத்தார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இந்த அறிவுரையை நாம் நேர்மையாக பின்பற்றினால், பிரச்னை இருக்காது. சமூக காரணங்களால் இட ஒதுக்கீடு இருக்கிறது. சமூக பிரிவினை இருக்கும் வரை, இட ஒதுக்கீடு தொடரத் தான் செய்யும். இட ஒதுக்கீடு கிடைத்து அதனால் பயன் அடைந்தவர்கள், அதனை விட்டுக் கொடுக்க வேண்டும்,” என்றார்.
