3 மாதம் சொன்னாங்க... 33 மாதம் ஆச்சு... இன்னும் தீரல ஆசிரியர் சம்பள முரண்பாடு
3 மாதம் சொன்னாங்க... 33 மாதம் ஆச்சு... இன்னும் தீரல ஆசிரியர் சம்பள முரண்பாடு
UPDATED : ஆக 21, 2025 12:00 AM
ADDED : ஆக 21, 2025 09:48 AM
மதுரை:
தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 15 ஆண்டுகளாக நிலவும் சம்பள முரண்பாடு பிரச்னையை 3 மாதங்களில் தீர்க்க குழு அமைக்கப்பட்டு 33 மாதங்கள் கடந்தும் முடிவில்லாததால் அதிருப்தியான ஆசிரியர்கள் அடுத்தமாதம் சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இத்துறையில் ஒரே கல்வித்தகுதி, ஒரே பதவிக்கு 2009 ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் 8,370 ரூபாய் எனவும், ஜூன் 1க்கு பின் நியமனமானவர்களுக்கு 5,200 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இது 'சம வேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும்' என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாடு எனக் கூறி பாதிக்கப்பட்ட 20,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் இதுதொடர்பாக நடந்த ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தீர்க்கப்படும் என உறுதியளித்தார். 'இடைநிலை ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு களையப்படும்' என 2021 தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.
ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தீர்வு இல்லை. 2022ல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதன்பின், 2023 ஜன.,1ல் இப்பிரச்னையை தீர்க்க மூன்று நபர் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் - எஸ்.எஸ்.டி.ஏ., மாநில பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது:
நாங்கள் கேட்பது மத்திய அரசுக்கு இணையான சம்பளம்கூட அல்ல. ஒரே கல்வித் தகுதிக்கு ஏற்ற சம்பளம் தான். தற்போது 20,000 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம். இது நாட்டில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.
முரண்பாட்டை தீர்க்க தமிழக அரசு குழு அமைத்து 33 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மாணவர் கல்வி பாதிக்காமல் விடுமுறை நாட்களில் மட்டுமே இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.இதுபோல் செப்டம்பரில் பருவத் தேர்வையடுத்து பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.