திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி; மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி; மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
UPDATED : அக் 01, 2025 10:11 AM
ADDED : அக் 01, 2025 10:12 AM
கோவை:
திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு, 15 ஆயிரம் ரூபாய்- பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், 2025-26-ம் ஆண்டுக்கு பள்ளி மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப்பெயர்கள் உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழு முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு, குறள் பரிசுக்குரியோர் பட்டியல், சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு, கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இந்த முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்துகொள்ள இயலாது.
திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பத்தை, கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithuraitn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு, 0422 - 2300718 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.