UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 10:31 AM
திருநகர்:
திருநகர் அண்ணா பூங்காவை அறிவியல் பூங்காவாக மாற்ற ரூ. 4.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கவுன்சிலர் சுவேதா தெரிவித்தார்.
திருநகர் அண்ணா பூங்காவில் ஹாக்கி, இறகு பந்து, கைப்பந்து மைதானங்கள் உள்ளன. சிறுவர் விளையாட்டுச் சாதனங்களும் பூங்காவை சுற்றி வாக்கிங் செல்வோருக்காக நடைமேடையும் உள்ளது.
கவுன்சிலர் சுவேதா கூறியதாவது:
இப்பூங்காவை சீரமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணிக்கம் தாகூர் எம்.பி., யிடம் இதுகுறித்து தெரிவித்தேன். அவரது பரிந்துரையின்பேரில், அண்ணா பூங்காவை அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பூங்காவாக மாற்றப்பட உள்ளது.
இங்கு பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அறிவியல், கணித உபகரணங்கள் அமைக்கப்படும். ரோபோடிக்ஸ், பயோ டைவர்சிட்டி கார்டன் ஆகியவையும் இடம்பெறும். பூங்காவில் உள்ள ஹாக்கி, கைப்பந்து, இறகுப் பந்து மைதானங்களும் நவீன மயமாக்கப்பட உள்ளன.
மாநில நிதியில் இருந்து இப்பணிகளுக்காக ரூ. 2.70 கோடி, சுற்றுச்சுவர் அமைக்க ரூ. 1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டிச. 15ல் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட உள்ளது. துவங்கிய 6 மாதங்களில் பணிகள் நிறைவடையும். அதன்பின் இது கிரீன் சோன் (மண்டலம்) என அறிவிக்கப்பட உள்ளது என்றார்.