பாரதியின் கருத்துகள் நமக்கு வழிகாட்டி கல்லுாரி விழாவில் விருதுநகர் கலெக்டர் பேச்சு
பாரதியின் கருத்துகள் நமக்கு வழிகாட்டி கல்லுாரி விழாவில் விருதுநகர் கலெக்டர் பேச்சு
UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 10:30 AM
மதுரை:
மகாகவி பாரதியின் கருத்துகள் நமக்கு வழிகாட்டியாக விளங்குகிறது என, மதுரை தியாகராஜர் கலைக் கல்லுாரியில் நடந்த பாரதியார் தினவிழாவில் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில் நடந்த விழாவுக்கு முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். செயலாளர் ஹரிதியாகராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் பாரதி ஒரு காலக்கணிதம் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:
பாரதியார் வாழ்ந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவில் ஒரு நிர்வாக கட்டமைப்பை முழுவலிமையாக ஆங்கிலேயர் கையில் எடுத்தனர். அத்தகைய சூழலில் ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தப்பட்டது.
இந்த சமூக, பொருளாதார சூழலில் இந்திய வளங்களை மொத்தமாக எடுத்துச் செல்வதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. இந்நிலையில் மொழி, அரசியல், சமூகம், பொருளாதாரம் என நெருக்கடியான சூழலில் பாரதி பிறந்தார்.
அவர் ஐந்து வயதில் தாயை இழந்தார். 16 வயதில் தந்தையை இழந்தார். காசியில் அத்தை வீட்டில் 3 ஆண்டுகள் சென்று படித்தார். மீண்டும் 20 வது வயதில் தமிழகம் வந்தார்.
பாரதி வந்த பின்பே தமிழில் சொல் புதிது, பொருள் புதிதாக இருந்தது. அச்சமில்லை... அச்சமில்லை... இச்செகத்தில் உள்ளோர் எல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமில்லை... என்று எக்காலத்திற்கும் பொருத்தமானதாக அவர் எழுதியதால் அவர் ஒரு காலக்கணிதமாக விளங்குகிறார்.
அவர் எல்லா பாடல்களிலும் அச்சம், சோம்பல் குறித்து எழுதியிருக்கிறார். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என வலியுறுத்தியவர்தான், பாதகம் செய்வோரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா என்றும் எழுதியுள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது பிரச்னையை எதிர்கொள்ள பாரதியின் கருத்துகள் உதவுகிறது.
அவர் வாழ்ந்த காலச் சூழல் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தாலும், அவரது தத்துவமும், கருத்துகளும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறதென்றால் பாரதி எத்தகைய மகாகவி என அறியலாம். துன்பம், சோம்பல், அச்சம் இந்த மூன்றும் கூடாது என்பதுதான் அவரது தனிமனித வளர்ச்சி கோட்பாடு.
இவ்வாறு அவர் பேசினார்.