பொருளாதாரத்துக்கான நோபல் மூன்று கல்வியாளர்கள் தேர்வு
பொருளாதாரத்துக்கான நோபல் மூன்று கல்வியாளர்கள் தேர்வு
UPDATED : அக் 15, 2024 12:00 AM
ADDED : அக் 15, 2024 10:37 PM
ஸ்டாக்ஹோம்:
ஒரு நாட்டின் வளர்ச்சியில் சமூக அமைப்பின் முக்கியத்துவம் குறித்த ஆய்வுக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர்கள் மூவர், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும், பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பு அளித்தோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்தாண்டுக்கான விருதுகளில் கடைசியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதன்படி, அமெரிக்காவின் மசாசூட்டஸ் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றும் டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சிகாகோ பல்கலையில் பணியாற்றும் சைமன் ஜான்சன் ஆகிய மூன்று கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு நாட்டின் வளர்ச்சியில், அதன் சமூக அமைப்புகளின் பங்களிப்பு தொடர்பாக இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார வளர்ச்சியில் ஒரு நாடு வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும், அதன் சமூக அமைப்புகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பது இவர்களுடைய ஆய்வு கூறுகிறது.
பலவீனமான சட்டம் - ஒழுங்கு, சுரண்டல் அதிகம் உள்ள நாடுகளின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும். லஞ்சம், ஊழல் ஆகியவை இல்லாத அல்லது குறைவாக உள்ள சமூக அமைப்பை கொண்ட நாடுகளே வளர்ச்சி காண்கின்றன என்பது இவர்களுடைய வாதம்.