நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மூன்று பல்கலைகளுக்கு துணைவேந்தர் தேடல்
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மூன்று பல்கலைகளுக்கு துணைவேந்தர் தேடல்
UPDATED : ஜன 13, 2026 11:05 AM
ADDED : ஜன 13, 2026 11:08 AM

சென்னை:
நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், பல்கலை துணைவேந்தர் நியமனத்தில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைகளுக்கு, துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக, மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை, முதல்வருக்கு வழங்கி, தமிழக சட்டசபையில், சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்தார்.
மாநில அரசு நீதிமன்றம் சென்றது. அந்த சட்ட மசோதாக்களுக்கு, நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதன்பின் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம், கவர்னரிடம் இருந்து முதல்வருக்கு மாற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு, இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கு துணைவேந்தர் தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திருச்சி, காரைக்குடி, சென்னையைச் சேர்ந்த, மூன்று பேராசிரியர்கள், இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் பெரியார் பல்கலையில், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 24ம் தேதி நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலையில், தகுதியான நபரை தேர்வு செய்யும் பணியில், தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பாரதிதாசன் பல்கலையில், துணைவேந்தர் பதவிக்கு நேர்காணல் நடப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மாநில அரசு அதிகாரம் பறிபோகும் அபாயம்
நாடு முழுதும் உள்ள, மத்திய, மாநில, தனியார் பல்கலைகளுக்கு, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், மத்திய அரசிடம் மட்டுமே இருக்கும் வகையில், ஏற்கனவே யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.சி.இ.ஆர்.டி., ஆகிய அமைப்புகள் கலைக்கப்பட்டு, பொதுவான அமைப்பை உருவாக்கும் வகையில், வரைவு தயாரிக்கப்பட்டு, பார்லிமென்டின் நிலைக்குழு ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.
இந்த வரைவு நடைமுறைக்கு வந்தால், எந்த மாநிலத்திலும், எந்த மாநிலத்தை சேர்ந்தவரும், துணைவேந்தராகும் வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம், மாநில அரசின் அதிகாரம் முற்றிலும் பறிபோகும் அபாயம் உள்ளது.

