UPDATED : ஜூலை 27, 2026 12:36 PM
ADDED : ஜூலை 27, 2026 12:42 PM
2003:
திருப்பூர் 'நிட்மா' (பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம்) வெள்ளி விழா. மேடையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். முன்னால் மக்கள் கடல்; தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள், மாணவர்கள்… அவர் ஆற்றியது உரை அல்ல. திருப்பூரின் அடுத்த இருபதாண்டுக்கான திசைவழி.
அவர் திருப்பூரை வெறும் பின்னலாடை நகரமாகப் பார்க்கவில்லை. 'இந்திய மகுடத்தின் வைரம்' என்றார்.
வரைபடத்தில் சிறிய இடம். ஆனால் அசாத்திய உழைப்பு; தொழில்முனைவு; தன்னம்பிக்கை; உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நகரம் திருப்பூர்.
பாராட்டிவிட்டுப் போக கலாம் வரவில்லை.
'இன்னும் உயரமாகப் பற' என்றார்.
ஐந்து துாண்கள்
உலகச் சந்தையில் ஜெயிக்க ஐந்து துாண்கள் தேவை. தரம் - புதுமை - தொழில்நுட்பம் - சுற்றுச்சூழல் - மனிதவளம்.
சுத்திகரித்த கழிவுநீரை மறுபடி பயன்படுத்தும் திருப்பூரின் முயற்சியை வியந்து பாராட்டினார். தொழிலும் சூழலும் கைகோர்க்க முடியும். திருப்பூர் அதை நிரூபித்தது.
பெண்களுக்கு வேலை தந்த நகரம். சமூக மாற்றம் தந்த பூமி.
ஒரு நகரத்தின் வளர்ச்சி ஏற்றுமதிப் பட்டியலில் இல்லை. மக்களின் வாழ்க்கைத்தரத்தில் இருக்கிறது. இதை ஆழமாகப் பதிவு செய்தார்.
அன்று கலாம் சொன்னது 'விஷன் 2020'. இன்று நாம் நிற்பது 2030ன் வாசலில்.
மாறாத பாடம்
உலகம் மாறிவிட்டது. செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. டிஜிட்டல் வேகம் எடுத்துவிட்டது.
ஆனால் கலாம் சொல்லிவிட்டுச் சென்ற பாடம் மாறவில்லை:
* புதுமையை நிறுத்தாதே.
* தரத்தில் சமரசம் செய்யாதே.
* பசுமையை இழக்காதே.
* இளைஞர்களை உருவாக்கு.
* உலகத்தோடு மோதிப் பார்.
இது தான் கலாம் விட்டுச் சென்ற 'ஹோம் ஒர்க்'.
இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. ஏற்றுமதி கூடியிருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. நீர்நிலைகள் மீள்கின்றன. புதிய தலைமுறை இறக்கைகளை விரித்துவிட்டன. ஆனாலும் 'ஹோம் ஒர்க்' முடியவில்லை.
இதுவே தருணம்
கலாம் கனவு கண்ட திருப்பூர் சாதாரணமானதல்ல.
உலகமே வந்து கற்றுக்கொள்ளும் நகரம்!
அந்தப் பாடத்தை எழுதப்போவது யார்?
தொழிலதிபர் மட்டுமல்ல; ஆய்வகத்து மாணவன்; ஸ்டார்ட்--அப் இளைஞன்; மரம் நடும் தன்னார்வலர்; புதிய இயந்திரம் செய்யும் பொறியாளன்.
கலாம் கொடுத்த 'ஹோம் ஒர்க்' நோட்டு இன்னும் திறந்தே இருக்கிறது.
எழுதி முடிக்கும் நேரம்... இது தான்!
திரும்பிப் பார்க்கிறோம் நினைவுகளை மட்டுமல்ல... நிறைவேற வேண்டிய கனவுகளையும் நினைவூட்டும் நாளிது. மக்கள் குடியரசுத் தலைவராக விளங்கிய, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி, அவர் கனவு கண்ட திருப்பூரின் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும் சிறப்புப் பதிவு.
