டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு 6 மையங்களில் நடக்கிறது
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு 6 மையங்களில் நடக்கிறது
UPDATED : செப் 27, 2026 02:21 PM
ADDED : செப் 27, 2026 02:23 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 27ம் தேதி 6 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 முதல்நிலை தேர்வு நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி-1) பதவிகளுக்கான நேரடி நியமனம் செய்வதற்கான முதல்நிலை தேர்வு 27ம் தேதி நடக்கிறது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி, ஏ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி, ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி, இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரி ஆகிய 6 தேர்வு மையங்களில் 3,388 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு எழுத வருபவர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வருகை தர வேண்டும். 9:00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மொபைல் மற்றும் எந்த வகையான மின்னணு சாதனங்களையும் கொண்டு வர அனுமதி கிடையாது. தேர்வுக்கூட அனுமதி சீட்டினை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்திலிருந்து தேர்வு கூடத்திற்குச் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் உள்ளது.
