டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
UPDATED : ஆக 22, 2026 11:18 PM
ADDED : ஆக 22, 2026 11:19 PM
விழுப்புரம்:
விழுப்புரம் வேலை வாய்ப்பு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டு வரை நடந்த பல்வேறு தேர்வுகளில், இங்கு நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, 400,க்கும் மேற்பட்டோர் அரசுப்பணி பெற்றுள்ளனர்.
இதன்படி தற்போது, தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 பதவிகளுக்கான, 821 பணி காலியிடங்களுக்கான தேர்வுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு நவ., 1ம் தேதி காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரை நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பாக, இந்த குரூப் 2 முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கின.
பயிற்சி மைய முன்னாள் மாணவியும், விழுப்புரம் மாவட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளரான ரேவதி கலந்து கொண்டு, பயிற்சியை துவக்கி வைத்தும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதலை வழங்கியும் பேசினார். ஏராளமான தேர்வர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை, தினசரி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு, பாடம் மற்றும் பாடத்திட்டம் வாரியாக தேர்வுகள் நடத்தப்படும்.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள், நேரில் வந்து பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளனர்.
