UPDATED : மே 29, 2024 12:00 AM
ADDED : மே 29, 2024 05:41 PM
மதுரை:
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில், ஓட்டு எண்ணிக்கையை காரணம் காட்டி தானமாக பெற்ற உடலை வாங்க மறுத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்த மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் வேலுச்சாமி, 82 நேற்று (மே28) இறந்தார். அவரது உடலை மகன் சுவாமிநாதன் கல்லூரிக்கு இன்று தானமாக தர வந்த போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி உடனே வாங்க மறுத்து அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பினர்.
இது குறித்து அவரது மகன் சுவாமிநாதன் கூறுகையில், உடலை பதப்படுத்தி (எம்பாமிங்) பாதுகாத்து தேர்தல் முடிவுகள் முடிந்தபின் ஜூன் 6ஆம் தேதி கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படும் என்கின்றனர். மார்ச்சுவரியில் மற்ற உடல்களுடன் தானமாக தந்த தந்தை உடலையும் சேர்த்து வைப்பது வேதனை அளிக்கிறது என்றார். இது குறித்து கலெக்டர் சங்கீதாவிடம் பேசுவதற்காக டாக்டர்கள் சென்றுள்ளனர்.