UPDATED : ஏப் 13, 2026 11:45 AM
ADDED : ஏப் 13, 2026 11:46 AM

'விதிகளுக்கு முரணாக பல நிறுவனங்கள் போலி பட்டங்களை வழங்கி வருகின்றன; உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்கு இவை அங்கீகரிக்கப்படாது,' என, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.
யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு வெளியிட்ட அறிக்கை:
பட்டங்கள் வழங்கும் அதிகாரம், மாநில சட்டம், மத்திய சட்டம் அல்லது மாகாண சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைகள் அல்லது யு.ஜி.சி., சட்டம் 1956ன் படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கே உள்ளது.
ஆனால், யு.ஜி.சி.,க்கு கிடைத்த தகவலின்படி, சில கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி., சட்ட விதி முறைகளை மீறி பட்டங்கள் வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் போலி பட்டங்கள் அங்கீகாரமற்றவை. உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்கு செல்லுபடியாகாது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர், எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் சேர்வதற்கு முன், நிறுவனம் அங்கீகாரம் பெற்றதா என்பதை யு.ஜி.சி., இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும்.
மேலும், யு.ஜி.சி., சட்டத்திற்கு முரணாக பாடத்திட்டங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை, ugcampc@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
