யு.ஜி.சி., எச்சரிக்கை பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பகிர தடை
யு.ஜி.சி., எச்சரிக்கை பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பகிர தடை
UPDATED : ஜன 29, 2026 09:45 AM
ADDED : ஜன 29, 2026 09:47 AM

நாட்டின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை சேகரிக்க, மாணவர்கள், வல்லுநர்களிடம் கட்டுரைகளை கேட்கும் வெளிநாட்டு உளவு நிறுவனங்களால், புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டின் பாதுகாப்பு துறை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. முப்படைகளிலும், புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றன. இவை, எதிரி நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
புதிய முறை
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்படும் புதிய யுக்திகள், அரசின் செயல்பாடுகள் குறித்த ரகசிய தகவல்களை சேகரிக்க, சி.ஐ.ஓ.,க்கள் எனும் வெளிநாட்டு உளவுத் துறை பிரிவுகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. அவற்றில், சீன அமைப்புகள் முன்னணியில் உள்ளன.
இவை, உளவாளி களின் வாயிலாக தகவல்களை சேகரிக்க, பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றன.
அவற்றில் முக்கியமாக, பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், என்.சி.சி., உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் உள்ளிட்டோரிடம், ஆதாரப் பூர்வமான தகவல்களை சேகரிக்க, புதிய முறையை பின்பற்றுகின்றன.
அவர்களை கண்டறிய, வேலைவாய்ப்பு இணையதளங்களான, 'லிங்க்ட் இன், நாவ்க்ரி' உள்ளிட்டவற்றில், பாதுகாப்பு மற்றும் இதழியல் துறையில் கள அனுபவம் வாய்ந்தவர்களின் கட்டுரைகளுக்கு, அதிக சன்மானம் வழங்குவதாக விளம்பரம் செய்கின்றன.
விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், இந்தியாவில் இருப்பதாக காட்டிக் கொள்கின்றன.
ஊக்குவிப்பு
அந்நிறுவனங்கள், இந்தியா - சீனா உறவு, இந்தோ - பசிபிக் பகுதி மேம்பாடு சார்ந்த, 'குவாட்' மற்றும் 20 நாடுகளின் கூட்டமைப்பான 'ஜி 20' தொடர்பான நடவடிக்கைகள், புதிய ராணுவ தளவாடங்கள், ஆயுதக் கொள்முதல், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளுடனான கூட்டு கடற்படை பயிற்சி உள்ளிட்ட கட்டுரைகளை எழுதும்படி ஊக்குவிக்கின்றன.
அவற்றில் உள்ள தகவல்களுக்கு ஏற்ப, ஒரு கட்டுரைக்கு, 8,000 முதல், 1 லட்சம் ரூபாய் வரை சன்மானம் அளிப்பதாக உறுதியளிக்கின்றன.
அந்த தொகையை, வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் வங்கி கணக்குகள், 'ஹேக்' செய்யப்பட்டு, அவற்றின் வாயிலாகவோ அல்லது வெளிநாட்டு பணப் பரிமாற்றமாகவோ, மோசடி செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சியாகவோ அனுப்பப்படுகின்றன.
அறிவுறுத்தல்
சமீபத்தில், குஜராத் நபர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து, 8.5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு, அதிலிருந்து 40,000 ரூபாயை, கட்டுரை அனுப்பிய ஒரு பத்திரிகையாளரின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை சேகரித்த மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை எச்சரித்து உள்ளது.
மேலும், இது போன்ற மோசடி நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் சிக்காத வகையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, உயர் கல்வி நிறுவனங்களை பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
'தரவு சுரண்டலுக்கு பலியாகக் கூடாது'
இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் சுதீப் சிங், பல்கலை துணை வேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தேசபக்தி சார்ந்த உணர்ச்சிகரமான தலைப்புகளில் கட்டுரைகள் கோரும் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை, ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலமுறை ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், தேச நலன், பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் சார்ந்த விஷயங்களை, அறிமுகமில்லாத நபர்களுக்கு பகிரக் கூடாது. அதே போல், தனி நபர்களின் வங்கி, பான், ஆதார் எண்களையும் பகிரக் கூடாது. இந்திய அறிவு சூழலுக்கு எதிரான தகவல் போரில், தரவு சுரண்டலுக்கு யாரும் பலியாகக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

