உணவு பதப்படுத்துதல் திட்டம் ரூ.1,920 கோடி கூடுதல் நிதி மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உணவு பதப்படுத்துதல் திட்டம் ரூ.1,920 கோடி கூடுதல் நிதி மத்திய அமைச்சரவை ஒப்புதல்
UPDATED : ஆக 02, 2025 12:00 AM
ADDED : ஆக 02, 2025 10:58 AM
புதுடில்லி:
உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் மேம்பாட்டுக்கான, பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்ட நிதி ஒதுக்கீட்டை மேலும் 1,920 கோடி ரூபாய் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு முதல், பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம், முழுமையாக மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டுடன் முடிவடையவிருந்த இத்திட்டத்தை, மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்க முடிவு செய்து, பட்ஜெட்டின் போது 4,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
உணவு பதப்படுத்தல் தொழில்துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் 1,920 கோடி ரூபாய் உயர்த்தி, 6,520 கோடியாக்க மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும் இந்த கூடுதல் நிதி, உணவுப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் வசதிகள் மற்றும் 100 உணவு பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க பயன்படுத்தப்படும். இதன் வாயிலாக கூடுதலாக ஆண்டுக்கு 20 முதல் 30 லட்சம் டன் உணவு பதப்படுத்தும் திறன் உருவாக்கப்படும்.