பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு கோர்ட் உத்தரவிட்டும் பல்கலை மவுனம்
பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு கோர்ட் உத்தரவிட்டும் பல்கலை மவுனம்
UPDATED : டிச 18, 2025 11:15 PM
ADDED : டிச 18, 2025 11:17 PM

சென்னை:
சென்னை பல்கலையில், 22 பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணை குழு, அறிக்கை அளித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காமல், சென்னை பல்கலை மவுனம் காத்து வருகிறது.
சென்னை பல்கலையில், 2015ம் ஆண்டு, தமிழ், கன்னடம், ஹிந்தி, இந்திய வரலாறு, சைவ சித்தாந்தம் உட்பட பல்வேறு துறைகளில், 22 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில், பல்கலை மானியக்குழு விதிகள், இடஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.
சிண்டிகேட் கூட்டம் இதையடுத்து, பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக விசாரிக்க, சென்னை பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில், 2018ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; விசாரணை துவங்கப்படவில்லை.
பேராசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து, சென்னை பல்கலை முன்னாள் பேராசிரியர் ரஹ்மத்துல்லா, சென்னை உயர்நீதிமன்றத்தில், 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை பல்கலை உரிய விசாரணை நடத்த வேண்டும்; தவறு நிரூபிக்கப்பட்டால் பேராசிரியர்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 2024 ஆகஸ்டில் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு, ஐ.ஐ.டி., பேராசிரியர் சரித்குமார் தாஸ், முன்னாள் துணைவேந்தர் கவுரி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை அமைத்தது.
இக்குழு, கடந்த மே மாதம் 14ம் தேதி, விசாரணை அறிக்கையை சிண்டிகேட் கூட்டத்தில் சமர்பித்தது. இணை பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த சுந்தரத்துக்கு, பேராசிரியர் பணி தரப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு தகுதி இருந்தும், விதிகள் மீறி சுமதி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பேராசிரியர் மணிவாசகம், பூவராகமூர்த்தி, சரவணன் ஆகியோரும் விதிகள் மீறி, பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மற்ற நியமனம் தொடர்பாக, உரிய ஆவணங்களை பல்கலை சமர்பிக்காததால், முடிவு எட்டப்படவில்லை என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அடிப்படையில், தவறு நிரூபிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சிண்டிகேட்டில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பல்கலை நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு
இதுகுறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:
சென்னை பல்கலையில், 2015ம் ஆண்டு 22 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில், பதிவாளர் ஏழுமலையும் அடங்குவார். சில நியமனங்களில் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டு, விசாரணை குழு அறிக்கை வழங்கியும், பல்கலை நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆறு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளை கடந்தும், பல்கலை பதிவாளர் ரீட்டா ஜானும், நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
இதுபோன்ற செயல்களுக்கு, பல்கலையும், உயர்கல்வித்துறையும், நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். யாரையோ காப்பாற்ற, நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

